கோமல் அன்பரசன் மயிலாடுதுறை மாவட்டம்

“மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்” என்று பல ஆண்டுகளாக ஒலித்து, ஓய்ந்த மக்களின் குரல் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த பிறகு மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு நகராட்சியாக அங்கம் வகிக்கும் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற ஏக்கம் பலருக்கு இருந்தாலும், இன்னும் சிலருக்கு “மயிலாடுதுறையை ஏன் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்” என்று குழப்பம் நீடித்து வரும் நிலையில் “ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்” என்ற புத்தகத்தோடு களமிறங்கியிருக்கின்றனர் மயிலாடுதுறையைச் சேர்ந்த காவிரி அமைப்பினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம் பெற இருக்கும் ஐந்து ஒன்றியங்களில் வீதி வீதியாக இறங்கி அந்தப் புத்தகங்களை விநியோகித்து, இன்று காலை முதல் மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தத் தொடங்கினர்.

காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசனிடம் பேசினேன். “கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் ஒன்றியங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் மாவட்ட தலைநகருக்குப் போக வேண்டும் என்றால் திருவாரூர் என்னும் வேறு மாவட்டத்தை கடந்தோ அல்லது காரைக்கால் யூனியன் பிரதேசத்தைக் கடந்தோதான் போக வேண்டியிருக்கிறது. ஒரு சாமானியன் தன் மாவட்ட தலைநகருக்குச் செல்ல வாகன வரி தனியே கட்டிவிட்டுச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மயிலாடுதுறை மக்களுக்குதான் நேர்ந்திருக்கிறது. கொள்ளிடத்தில் இருக்கும் ஒருவன், மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்துக்குச் செல்ல 4 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. 100 கி.மீ தூரம் கடந்து ஒருநாள் நேரத்தை செலவிட்டு மாவட்ட தலைநகர் ஏன் செல்ல வேண்டும்?

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டில் முக்கிய ஜங்ஷன் ஆக இருந்தது மயிலாடுதுறை. 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீதிமன்றம், ரயில்வே ஜங்ஷன் என தொண்மை வரலாற்றுக்கு சற்றும் குறைவில்லாத மயிலாடுதுறைக்கு இன்னும் சரியான பேருந்து நிலையம் வசதியில்லை என்பதுதான் வேதனை” என்றார்.

மேலும், பல வரலாற்று தகுதிகள், ஒரு மாவட்டம் உருவாக போதுமான மக்கள் தொகை கொண்ட மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காமல் தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டு முறை பிரித்தபோதும் மயிலாடுதுறையைக் கருத்தில் கொள்ளாமல், நாகப்பட்டினம் மாவட்டத்தை நிலப்பரப்பு ரீதியாக இரண்டு துண்டுகளாக்கி நாகையிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள திருவாரூரை தனி மாவட்டமாக அறிவித்து மயிலாடுதுறை மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்து விட்டனர்.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்தால் மருத்துவக்கல்லூரி உருவாகும், பேருந்து நிலையம் அமையும், அரசு திட்டம் சாமானியனுக்கும் எட்டும், விவசாயிகளுக்கு நன்மை பிறக்கும், தொழில்கள் உருவாகும், உள்கட்டமைப்பு ஒழுங்கு பெற்று மாநகராட்சி வலிமை பெறும்” என்றார்.

“நம்முடைய கோரிக்கையில் 200 சதவிகிதம் நியாயமிருந்தாலும் அழுகிற பிள்ளை தானே பால் குடிக்கும். எனவே, மதம், இனம், சாதி, கட்சி எல்லாவற்றையும் கடந்து ஒன்றுபடுவோம். மயிலாடுதுறை தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக்கியே தீருவோம்” என்று மீண்டும் மக்களை சந்தித்து புத்தகம் கொடுக்கச் சென்றுவிட்டார் கோமல் அன்பரசன்.

கலெக்டர் ஆபிஸ்ல மனு கொடுக்கக்கூட 1,000 ரூபாய் செலவு செஞ்சு போனும்னா என்ன சார் பண்ணுறதுன்னு புலம்புற ஏழை மக்கள் ஒரு புறம், சரியான உயர்கல்வி கிடைக்காது, கிடைத்தும் பயனில்லாத மாணவர்கள் ஒருபுறம். நலத்திட்டங்கள் உதவி கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளும், தொழிலாளிகளும் என அனைவரின் ஏக்கமும் மயிலாடுதுறை மாவட்டம் ஆக அறிவிக்க வேண்டும் என்பதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *